சூறாவளி வீசும் நேரத்தை விட, அது ஓய்ந்த பின்னரான காலப்பகுதியிலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுவதாக அண்மைக்கால ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்தார்.
மொனாஷ் பல்கலைக்கழகமானது 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒன்பது நாடுகளில் இடம்பெற்ற சுமார் 15 மில்லியன் மரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வை முன்னெடுத்துள்ளது.
சூறாவளிக் காற்றின் நேரடித் தாக்கத்தினால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையை விட, சூறாவளி ஓய்ந்த பின்னரான காலப்பகுதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சூறாவளிக்குப் பின்னர் ஏற்படும் தொற்று நோய்கள், போதிய மருத்துவ வசதியின்மை, வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு சீர்குலைவு போன்ற காரணிகளே இவ்வாறான அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“இந்த ஆய்வு முடிவுகளை நாம் பாடமாகக்கொள்ள வேண்டும். சூறாவளி வீசும் போது மாத்திரமன்றி, அது ஓய்ந்த பின்னரும் மக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.