தாய்வானைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவது மற்றும் முழுமையாக முற்றுகையிடுவது போன்ற பாரிய இராணுவப் பயிற்சிகளைச் சீனா ஆரம்பித்துள்ளது. இது தாய்வானில் உள்ள ‘பிரிவினைவாத சக்திகளுக்கு’ விடுக்கப்படும் நேரடி எச்சரிக்கை எனச் சீனா பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தப் பயிற்சிக்காகச் சீனாவின் தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை ஆகிய முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பயிற்சியின் போது நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும் அதிநவீன வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதாகச் சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
தாய்வான் தீவை வெளியுலகில் இருந்து துண்டிக்கும் வகையிலான ‘முற்றுகையிடும்’ (Blockade) ஒத்திகைகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
தாய்வானுக்கு 11 பில்லியன் டொலர் பெறுமதியான அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்குச் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தது. இந்த ஆயுத ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சீனா இந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கையைத் தாய்வான் ஜனாதிபதி அலுவலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது சர்வதேச விதிமுறைகளுக்கு விடுக்கப்பட்ட சவால் என்றும், பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் செயல் என்றும் தாய்வான் தெரிவித்துள்ளது. தனது எல்லைகளைப் பாதுகாக்கத் தாய்வான் இராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.