கனடாவிலுள்ள பண்ணைகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளரான இந்தச் சந்தேக நபர், காலி மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளில் உள்ள நான்கு பேருக்குக் கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறித் தலா 1.3 மில்லியன் ரூபாய் வீதம் மோசடி செய்துள்ளார். களுத்துறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பணம் பெற்றதாக வெளிநாட்டுப் பணியகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், வரகாபொல, அம்பகலகந்த பகுதியில் வைத்துச் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்தச் சோதனை நடவடிக்கையின்போது, சைப்ரஸில் தலா 75,000 ரூபாய்க்கு வேலை வழங்குவதற்கான மூன்று ஒப்பந்தங்கள் அவரது வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளையில், சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 1.7 மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாகப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.