இந்தியா தமிழகத்தில் முன்பள்ளி, அங்காடிகள் உள்ளடங்கலாக பல பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படாத நிலையில், குறித்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதாக் கட்சியினர் கடந்த வாரம் இவ்வாறு போராட்டம் நடாத்தினர்.
அத்துடன் விஜயதசமி நாளான நாளை கோயில் திறக்கப்பட வேண்டும் என, கோவையைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது இவ்விடயம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய முதலமைச்சரின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்ததுடன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும், முன்பள்ளி, அங்காடிகள் முழுமையாக இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Leave a comment