‘டித்வா’ புயல் காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இணைந்து இப்பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் (IRCON/Indian Railway Construction) இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு ரயில் மார்க்கம் பின்வரும், மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை மூன்று கட்டங்களின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.
அண்மைய புயல் அனர்த்தத்தினால் வடக்கு ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அரசின் இந்த விரைவான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வடக்கு – தெற்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மீண்டும் சீர்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.