மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியுமென விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், விவசாயத்துறை அமைச்சரை, சந்தித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயம் செய்வதற்கு ஆர்வமுள்ள வடக்கு இளைஞர்களுக்காக அரை ஏக்கர் நிலத்தை வழங்கவும் அதற்கு தேவையான உரம், நீர், கிருமிநாசினிகள் உள்ளிட்டவைகளை தமது அமைச்சு ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், வட மாகாணத்தில் விவசாயத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் தகுதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews