உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில் போட்டியிட்டது), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காகத் தமக்கிடையே அமைத்துக் கொண்ட ‘கொள்கைக் கூட்டு’ச் செயற்பாடு தற்போது முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உட்பட சில உதிரித் தரப்புகளைச் சேர்த்துக்கொண்டு ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பெயரில் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்த அணிக்கும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையேதான் தேர்தலுக்குப் பின்னர் இந்த ‘கொள்கைக் கூட்டு’ அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டு முடிவுக்கு வர முக்கிய காரணமாக, மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தும் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகின்றது.
இது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி-யும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்-உம் தெரிவித்த கருத்துக்கள், இந்த ‘கொள்கைக் கூட்டு’ பெரும்பாலும் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துகின்றன.