அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில், குடிவரவு அதிகாரிகளின் (ICE) நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த சட்டக் கண்காணிப்பாளர் (Legal Observer) ஒருவர் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்களை வெடிக்கச் செய்துள்ளது.
மின்னிசோட்டாவைச் சேர்ந்த 37 வயதான ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good). இவர் மூன்று குழந்தைகளின் தாயும், அமெரிக்கக் குடிமகளும் ஆவார்.
நடந்தது என்ன? கடந்த புதன்கிழமை, தனது காரில் இருந்த ரெனியை இறங்குமாறு ICE அதிகாரி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அதிகாரி, ரெனியின் முகத்திலேயே மூன்று முறை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரெனி தனது காரை அதிகாரிகள் மீது மோத முயன்றதால், தற்காப்பிற்காகச் சுட்டதாகக் கூறினார்.
ஆனால், சம்பவ இடத்திலிருந்த வீடியோக்களின்படி, ரெனி தனது காரைத் திருப்பவே முயன்றுள்ளார். அப்போது அதிகாரி ஓடி வந்து அவரைச் சுடுவது பதிவாகியுள்ளது. அவர் காரை இடிக்க முயன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த விவகாரத்தில் ICE அதிகாரிக்கு ஆதரவாகப் பேசியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அந்தப் பெண் அதிகாரியைக் கொல்ல முயன்றதாகக் கூறி, போராட்டக்காரர்களைச் சாடியுள்ளார்.
மினியாபோலிஸ் நகர மேயர், ட்ரம்பின் கூற்று “பச்சைப் பொய்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ICE அதிகாரிகள் உடனடியாகத் தனது நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் “அரசு பயங்கரவாதம்” எனச் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதுடன், மினியாபோலிஸ் நகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது.