தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவு!

New Project 2020 04 23T195225.410

Chennai High Court

இந்தியாவின் தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் கிராமம் ஒன்றில், அரசின் அனுமதி பெறாமல் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டிருந்தமையால் , அதனை அகற்றுமாறு அரச அதிகாரி ஒருவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்துச் சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தமிழக அரசின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதால் அந்த சிலையை அகற்றியதில் தவறில்லை என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், வீதிகள், பராமரிக்கப்படாத நிலங்கள் மற்றும் அரச நிலங்களில் உள்ள தலைவர்களது சிலைகளை, மூன்று மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சிலைகள் மற்றும் கட்டுமாணங்களை அமைப்பது குறித்து விரிவான விதிகளை வகுக்க வேண்டும்.

அனுமதி பெற்று பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலைகளை அகற்றி, பூங்கா போன்ற இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை அமுல்படுத்தியமை தொடர்பாக, 6 மாதங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தமிழக அரசுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் .

Exit mobile version