எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(15) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் முன்னெடுக்காத காரணத்தினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் தடுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு மூடப்பட்டாலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், வெளிநாட்டு இருப்பை, அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கு பயன்படுத்தி உரிய வகையில் முகாமை செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment