மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் நிலச்சரிவு ஏற்படும் நேரடி அபாய வலயங்களுக்குள் அமைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தின் 160 பாடசாலைகளை உள்ளடக்கிய விரிவான ஆய்வறிக்கை, கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட சில பாடசாலைகளைப் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாதுகாக்க முடியும். ஆனால், அவ்வாறு பாதுகாக்க முடியாத நிலையில் உள்ள பாடசாலைகள் குறித்துக் கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,” என NBRO பணிப்பாளர் நாயகம் பொறியாளர் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட அதிக அபாயமுள்ள பாடசாலைகள் தொடர்பாக மேலதிக ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்துவதன் மூலமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என NBRO சுட்டிக்காட்டியுள்ளது.