இலங்கையில் சிறுவர் பணியாளர்களை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய வழிநடத்தல் குழுவின் (National Steering Committee) இந்த ஆண்டிற்கான முதலாவது அமர்வு இன்று (23) காலை நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் பொதுச் செயலகத்தில் நடைபெற்றது.
தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சர்வதேச மற்றும் உள்நாட்டுத் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கைக்கான பிரதிநிதி ஜோனி சிம்ப்சன் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் நதீகா வத்தலியத்த ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
கடந்த ஓராண்டில் சிறுவர் பணியாளர்களை ஒழிப்பதற்காகத் தொழில் திணைக்களம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஆணையாளர் என்.எம்.வை. துஷாரி சமர்ப்பித்தார்.
தெற்காசியப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் சிறுவர் பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளதாகப் புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.எம்.கே. நவரத்ன சுட்டிக்காட்டினார்.
தற்போது மிகக் குறைந்த அளவில் எஞ்சியிருக்கும் சிறுவர் பணியாளர்களையும் முற்றாக இல்லாதொழித்து, இலங்கையைச் “சிறுவர் உழைப்பற்ற நாடாக” சர்வதேச ரீதியில் நிலைநிறுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள் குறித்து இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதுடன், வறுமை காரணமாகச் சிறுவர்கள் வேலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க விசேட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.