ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து (Miss Finland) பட்டம் வென்ற சாரா ஜாஃப்சே (Sara Jafse) தனது மகுடத்தை இழந்துள்ளார்.
சாரா ஜாஃப்சே தனது கண்களை இழுத்துப் பிடித்து ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதற்கு கீழே “சீனருடன் உணவு உண்ணுதல்” என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்த சாரா, தலைவலியைப் போக்கவே அவ்வாறு செய்ததாகவும், தனது நண்பர் அனுமதியின்றி அந்தப் படத்தைப் பகிர்ந்துவிட்டதாகவும் கூறினார். டிசம்பர் 8 அன்று அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார்.
சாராவின் விளக்கத்தை ஏற்க மறுத்த மிஸ் பின்லாந்து அமைப்பு, அவரது பட்டத்தைப் பறித்து உத்தரவிட்டது. “இனவெறி எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று அந்த அமைப்பு ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் இத்துடன் முடிவடையாமல், பின்லாந்தின் ஆளும் கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் சாராவுக்கு ஆதரவாகத் தங்கள் கண்களை இழுத்துப் பிடித்தபடி புகைப்படங்களை வெளியிட்டனர். இது ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிலைமை சர்வதேச இராஜதந்திர சிக்கலாக மாறியதையடுத்து, பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo) நேரடியாகத் தலையிட்டார். அவர் ஜப்பான் மற்றும் தென்கொரிய மொழிகளில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கடிதங்களை வெளியிட்டுள்ளார். “இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை. இனவெறிக்கு எங்கள் நாட்டில் இடமில்லை” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் பின்லாந்திற்கு வரும் ஆசியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சம் அந்நாட்டு சுற்றுலாத் துறையினரிடையே எழுந்துள்ளது.