அதிகார வரம்பு மீறிச் செயற்பட்ட காரணத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாகுல் கமீட் முஹமட் முஜாஹிர் இன்று (14 ) முதல் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந் நடவடிக்கை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் மேற்கொள்ளப்பட்டுள்ளது , இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாவனையில் இருந்தது எனக் கூறப்படும் உழவு இயந்திரம் ஒன்று குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது, இந்த நிலையில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் அந்த உழவு இயந்திரம் பிரதேச சபைக்குரியது என்று பிழையான உரிமை கோரும் கடிதத்தை வழங்கி உழவு இயந்திரத்தை நீதிமன்றத்தில் இருந்து விடுவித்துள்ளார். இதன்மூலம் அவர் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டார் என ஆளுநருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைப்பாடு தொடர்பாக நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழு அறிக்கை, மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த தீர்மானங்களுக்கு அமைய இன்று முதல் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் பதவிகள் தற்போது வெற்றிடமாகி உள்ளன.