மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பகுதியில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சக்திவாய்ந்த வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் (STF) நேற்று (06) மீட்டுள்ளனர்.
38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் இதன்போது மீட்கப்பட்டன.
இப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர், தனது வயலைச் சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியுள்ளார். இதன்போது நிலத்தின் அடியில் மர்மப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அவர் உடனடியாக வாகரை விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிரடிப் படையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தத்தின் போது இவை இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.