வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, முன்னேற்றகரமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (16) காலை நாடாளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதமர் மகிந்த ராஜபக்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் பல நெருக்கடிகள் இருந்தபோதும் அரசாங்கம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பல துறைகளின் சவால்களுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றே கூற வேண்டும். இது முக்கியமாக கொவிட்-19 பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதையும் பாதித்து மக்களைக் கடுமையாகப் பாதித்தது. அந்த தாக்கங்களில் இருந்து இலங்கையால் கூட விடுபட முடியவில்லை.
மேலும், கொவிட் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாம் முன்னெடுத்த செயற்பாடுகளின் ஊடாக பொருளாதாரத்தை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என நம்புகின்றோம்.
வரையறுக்கப்பட்ட அரச நிதியை கொண்டிருந்த போதிலும், சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொண்டது.
இதுவரை நாம் சுமார் 60,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளோம். வறுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் (100,000) பயிற்சி பெறாத நபர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்.
அரச துறையில் புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் சுமார் 3.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது.
சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. நீர் வழங்கல், எரிசக்தி, போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக தொடர்ந்து மேற்கொண்டுள்ள முதலீடுகள் கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இது பொருளாதாரத்தின் இயக்கவியல் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை நிரூபித்துள்ளது.
#SrilankaNews