யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்ச ரூபா பெறுமதியான நகைகளும் , ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் (ஹேண்ட்பேக்) சந்தேகத்திற்கு இடமான முறையில் இளைஞன் ஒருவன் நடமாடியுள்ளான்.
அது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்து , அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
அதன் போது குறித்த இளைஞன் 24 வயதுடைய குருநகர் பகுதியை சேர்ந்தவர் என்றும், இளைஞன் வைத்திருந்த பெண்களின் கைப்பையினுள் சுமார் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகை என்பன காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment