காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்?
இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபை அமர்வில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி, ஐ.நா. சபை செயலாளரை நியூயோர்க்கில் சந்தித்தபோது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகிறோம் எனக் கூறியுள்ளார்.
ஆனால் சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் போர்க் காலங்களில் சரணடைந்தவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்றார்.
மரணமடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டோருக்கே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அப்படி என்றால் கண்கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார்.
அந்த வகையில் கொலை செய்தவர்களுக்கு நீதித்துறை என்ன தண்டனை வழங்கப்போகிறது?
படுகொலை செய்யப்பட்டு மரணச் சான்றிதழ் கொடுப்போம் எனக் கூறுகின்ற ஜனாதிபதி படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவாரா? எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment