நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு முழுமையாக கைகொடுத்த நாடாக நாமே உள்ளோம், அத்துடன் கடன் நெருக்கடியில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழ ங்கும் விதமாக சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ள இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாணாக்கியன் எம்.பியின் விமர்சனத்தையும் கண்டித்துள்ளது.
இலங்கைக்கு சீனா நல்ல நண்பனல்ல என கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் எம்.பி நேற்று முன்தினம் சபையில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாகவே சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. அவர்கள் இட்டுள்ள ட்விட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது.
” மன்னிக்கவும் எம்.பி, உங்கள் புரிதல் தவறானது மற்றும் முழுமையற்றது. கொவிட் 19 வைரஸ் தொற்றின் போது இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்புகளை வழங்கிய நாடாக நாமே உள்ளோம்”. அத்துடன் உங்கள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட, சகல பகுதிகளுக்கும் வாழ்வாதார நிவாரணங்களை நாம் வழங்கியுள்ளோம்.
அதுமட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், ஐ.எம்.எப் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருவதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில், இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியில் சீனாவின் நிதி நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டதாகவும் இந்த முயற்சிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் சீனாவின் பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் நாட்டிற்கு விஜயம் செய்து வருவதாகவும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews