ஆரிய குளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம் என யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரியகுளம் தற்சமயம் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் மிகச்சிறப்பாகவும் தூய்மையாகவும் அதனைப் பேண வேண்டுமென அவரிடம் கூறியிருக்கின்றோம். அந்த நிபந்தனையின்படி முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
மாநகர சபையின் அனுமதியும் ஆரியகுளத்தில் படகு சேவைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. நாங்கள் பல நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்திருக்கின்றோம். படகு சேவைக்கான பாதுகாப்பு மற்றும் காப்புறுதிகள் செய்யப்படவேண்டும். நீச்சல் பயிற்சி பெற்ற இரண்டு ஊழியர்கள் தொடர்ச்சியாக கடமையாற்ற வேண்டும். பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட வேண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்கவெடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் அமைதியின்மையை உருவாக்கி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும்.
பொறுப்பில் இருக்கின்றவர்கள் ஆரியகுளத்தில் அரசியல் செய்வதை நாம் விரும்பவில்லை. அது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மையம். மக்களுக்காக கட்டப்பட்ட விடயத்தை மக்களிடம் விட்டுவிடுங்கள். அதை வைத்து குறுகிய அரசியலை நடத்த வேண்டாம்.இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இவ்வாறான ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக உங்களுடைய எதிர்ப்பினை காட்டி போராட வேண்டும் – என்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரியகுளம் தொடர்பாக முன்வைத்த கருத்து தொடர்பாக கேள்வியெழுப்பியபோது,
அவரின் கருத்துக்களை நான் கருத்திலெடுப்பதில்லை. அவரை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். மாநகரசபை ஆரியகுளத்தை புனரமைக்கும் போது அருகிலிருந்த விகாராதிபதியும் நிறுத்தக் கோரி பல்வேறு அழுத்தங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து கஜேந்திரகுமாரும் எதிராகப் போராடிக்கொண்டிருந்தார். அவரது கருத்தைப் பார்த்து நாம் கோபப்படவில்லை.சிலருடைய கருத்துக்களை நான் புன்னகைத்து விட்டு கடந்து விடுவேன்.
யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கு அருகிலுள்ள புல்லுக்குளம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலுள்ள. அது தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எம்மிடம் கையளிக்கப்பட்டால் அந்த குளத்தை புனரமைக்க தயார் – என்றார்.
#SriLankaNews
Leave a comment