யாழ் மாவட்ட 2022/23 பெரும்போக விவசாயத்துக்காக முதல்கட்டமாக 200 தொன் லக்பொஹொர யூரியா உரங்கள் யாழ்ப்பாணத்துக்கு இன்று (16.08.2022) எடுத்துவரப்பட்டுள்ளன.
இவை நெல் மற்றும் சோளப்பயிர்ச்செய்கைக்காக மானிய அடிப்படையில் 1 ஹெக்டயருக்கு 100 கிலோகிராம் என்ற அடிப்படையில் 50 கிலோகிராம் உரப்பொதியொன்று 10,000 ரூபாய் எனும் விலையில் வழங்கப்படவுள்ளன.
யாழ் மாவட்டத்தில் 13,000 ஹெட்டேயர் நெற்பயிர்ச்செய்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1300 தொன் யூரியா உரம் தேவைப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 200 தொன் யூரியா உரங்கள் இன்று யாழ் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மிகுதி உரங்கள் பிரதேச ரீதியாக கமநல சேவைகள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
வடமாகாண, யாழ் மாவட்டத்துக்கான 2022/23 பெரும்போகத்துக்கான உரங்களை அனுப்பி வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (15.08.2022) நடைபெற்றிருந்தது.
40 தொன் வீதம் 5 கொள்கலன்களில் யாழ்ப்பாணம் கோண்டாவில் உரக்களஞ்சியத்துக்கு கொண்டுவரப்பட்ட யூரியா உரங்களை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள், கையேற்று, கமநல சேவைகள் நிலைய அதிகாரிகளிடம் கையளித்தார்.
இதேவேளை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறி பயிர்களுக்கான உரங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் யாழ் மாவட்டத்துக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
#SriLankaNews