ஆடியில் இரண்டு அமாவாசை: குழம்ப தேவையில்லை!
ஆடி மாத்திலே இரண்டு அமாவாசை வருகின்றது. இது தொடர்பாக யாருமே குழம்ப தேவையில்லை என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.
ஆடி அமாவாசை தொடர்பாக அவர் இன்று (10.07.2023) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் ஆடி மாதத்திலே இரண்டு அமாவாசைகள் வருகின்றது. அதில் எது சரி எது தவறு என்று இரண்டு நிலையில் குழப்பத்தில் உள்ளனர். பஞ்சாங்கம் இரண்டும் ஆடி அமாவாசை என்றே போட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள்
இதில் எதை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் உண்டு. யாருமே குழம்ப வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு வருவது இது முதல் தடவையும் அல்ல. இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமிகளோ வந்தால் அந்த மாதம் மலமாதம் என்று அழைக்கப்படும்.
அந்த மாதங்களில் எந்த சுபகாரியங்களும் செய்ய மாட்டார்கள். திதிகள் இரண்டு வருவது அவை கூடுகின்ற நாளிகைகளைப் பொறுத்தது.
எனவே இரண்டு திதி வந்தால் அந்த மாதத்தில் நாம் இரண்டாவதாக வருகின்ற திதி எதுவோ அதனைக் கொள்வது தான் முறை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
திதிகள் இரண்டு வருவதும் நட்சத்திரங்கள் இரண்டு வருவதும் அவை கூடுகின்றதைப் பொறுத்தே அமைகின்றது.
முன்னோர்கள் வழிபாடு
அதனாலே நாம் எந்த ஐயப்பாடுகள் அடையத்தேவை இல்லை இந்த முறை ஆடிமாதத்திலே வருகின்ற இரண்டு அமாவாசைகளில் இரண்டாவதாக வருகின்ற அமாவாசையே ஆடி அமாவாசை ஆகும் அதுவே விரதநாளும் ஆகும்.
அன்றே விரதமிருந்து தர்ப்பணங்கள் செய்வதற்குரிய நாளுமாகும். எனவே 15.08.2023 அன்று இரண்டாவதாக வருகின்ற அமாவாசையினை விரத நாளாகக் கொள்வது தான் சரியும் சாஸ்திர பூர்வமானதுமாகும்.
எனவே இந்த நாளில் விரதமிருந்து தர்பணங்கள் செய்து கொள்ளலாம். எனவே நீங்கள் வழமை போல முன்னோர்கள் வழிபாடுகளை இயற்றிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Leave a comment