maxresdefault 4
அரசியல்இலங்கைசெய்திகள்

பொழுதுபோக்கிற்கு முகநூலில் பொங்கி எழுவதிலும் எந்த பயனும் இல்லை!!

Share

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் கூட்டமைப்பினர் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் தீர்மானங்களையே எடுத்து வருகின்றனர். வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயம் தொடர்ந்து அமைதியாக இருப்பதும், பொழுதுபோக்கிற்கு முகநூலில் பொங்கி எழுவதிலும் எந்த பயனும் இல்லை. தீர்மானம் மிக்கவர்களாக மாற வேண்டும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடந்து கொண்ட செயல்பாடு தொடர்பாக சிவகரன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாட்டால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக தகுதியை கூட்டமைப்பு இழந்து விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கால நிலவரத்தை நுட்பமாக புரிந்து கொண்டு தாம் தலைமை தாங்கும் மக்கள் கூட்டத்தின் இருப்பை மேலும் மேன்மைப்படுத்தும் வகையில் அந்த மக்களின் ஒத்துணர்ந்த மனநிலையையும், புரிந்துகொண்டு அறிவார்த்தமாக நின்று நிலைக்கக்கூடிய திடமான முடிவுகளை தகுந்த தருணத்தில் எடுப்பதே ஒரு அரசியல் கட்சியின் உண்மையான நோக்கு நிலையாகும்.

ஆனால் கூட்டமைப்பு மிகவும் பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக தீர்மானம் எடுத்துள்ளது. ஆகவே இவர்கள் தொடர்ந்தும் தலைமை தாங்க தகுதியுடையவர்களா? 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் கூட்டமைப்பினர் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் தீர்மானங்களையே எடுத்து வருகின்றனர். தற்போது தமிழரசுக்கட்சியின் தலைவரும் விமர்சித்திருப்தும் மிக வேடிக்கையானது.

ஆகவே, வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயம் தொடர்ந்து அமைதியாக இருப்பதும் பொழுது போக்கிற்கு முகநூலில் பொங்கி எழுவதில் எந்த பயனும் இல்லை. தீர்மானம் மிக்கவர்களாக மாற வேண்டும். இவர்களை வீட்டுக்கு அனுப்பும் பணியை விரைவாக முன்னெடுக்காவிட்டால் தமிழினத்தின் தன்மானத்தையும், சுயாதீனத்தையும், எதிரிகளிடம் வசப்படுத்தி விடுவார்கள்.

ஆகவே, நீங்கள் விரைவாக இனப்பற்றுடன் விழித்தெழுங்கள். அரசியல் விழிப்புணர்வு இல்லாத சமூகம் அனாதை பிணத்திற்கு ஒப்பானது தமிழ் மக்கள் தொடர்ந்து அமைதி காப்பதால் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எடுக்கின்றனர்.

எனவே, திரு. சம்மந்தன் வயோதிபம் காரணமாக வாழ்வின் அந்திம காலத்தில் உள்ளார். அவர் ஓய்வு பெறுவதே இந்த இனத்திற்கு செய்யக்கூடிய மிக சிறந்த நன்மையாகும்.

அதை பலரும் வலியுறுத்த வேண்டும். கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவர்களுக்கு ஒரு போதும் வல்லமையோ, ஆளுமையோ செயல்திறனோ இருந்ததில்லை. தேர்தலில் வெல்வது மட்டுமே அவர்களது இலக்கு. இவர்களால் எப்படி தலைமை தாங்கமுடியும்? என தமிழ்மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

வடிகட்டிய சிங்கள பௌத்த இனவாதிகளுடன் கூட்டு அதற்கு மாறாக ரணிலை ஐவர் ஆதரித்ததாக அறிகின்றோம். ஏன் இந்த இருட்டு வீட்டு குறுட்டு நாடகம்? நிதானமாக முடிவெடுக்க முடியாததும், எடுத்த முடிவை பின்பற்றாமையும் என்பது ஒரு அரசியல் கட்சிக்கு ஒழுங்குமல்ல. அரசியல்வாதிக்கு விழுப்பமும் அல்ல. ஆக மொத்தம் இவர்கள் அரசியல் வணிகர்களே. மிக கண்டணத்திற்குரியது இவர்களின் செயற்பாடு.

எனவே, வாக்களித்த மக்களின் விருப்பையோ, கருத்தியலாளர்களின் ஆலோசனையோ கேட்காமல் பல இயக்கங்களை உருவாக்கி ஆயுதத்தையும், பணத்தையும் வழங்கி அவர்களுக்குள் சண்டையும் ஏற்படுத்தி பலரை கொலை செய்ய வைத்து அமைதிப்படை என வந்து அட்டூழியம் செய்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை பங்கேற்று தமிழ்த்தேசியத்திற்கு எப்போதும் விரோதியாகவே செயற்படும் இந்தியாவின் சகுனி வேலையை புரிந்து கொள்ளாமல் இன ரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அவர்களில் தங்கியிருப்பது அரசியலின் அயோக்கியத்தனத்தின் அதி உச்சம்.

விடுதலைக்குப் போராடி, இழக்க முடியாத இழப்புகளை எல்லாம் சந்தித்து, ஏதிலியாக உள்ள தமிழினம் உங்களை மறந்தும் மன்னிக்காது. ஆகவே வாக்களித்த மக்களுக்கு எதிர்காலத்திலாவது விசுவாசமாக இருங்கள்.

ஒரு அரசியல் கட்சி மக்கள் நலனில் பொறுப்பேற்று, பொறுப்புக்கூறி, பகிர்ந்துகொள்ளுதல் அவசியம். ஆனால் தலைவர்கள் சர்வாதிகாரிகளாகவே இருக்கிறார்கள். எப்படி சனநாயக கட்டமைப்பை பின்பற்ற போகிறார்கள்?

பெயரளவில் ஜனநாயகக்கட்சி எல்லோரும் தலைவர் பிரபாகரனாக தீர்மானம் எடுக்கவும், செயற்படவும் ஆசை. ஆனால், ஒரு மணித்தியாலமேனும் பிரபாகரனாக வாழ முடியவில்லை. அறமில்லாத அரசியல் செய்ததின் விளைவை இன்று இராஜபக்ச குடும்பம் படும்பாட்டை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளை இவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.

எனவே அறிவாரத்தமாக தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, உணர்வு சார்ந்து முரண்படுவர்களால் ஒரு போதும் தலைவர்களாக முடியாது. சட்ட அறிவுள்ள திரு. சுமந்திரன் ஒரு தலைவராக நிதானமாக செயற்படாமல் மக்கள் மன்றை கையாள்வது, வழக்காடு மன்றில் ஒரு தரப்பு சட்டத்தரணி போல் வழக்காடுவது அல்ல. அதை சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தலைமையில்லாத வெறுமைக்குள் தமிழ்மக்கள் தொடர்ந்தும் தவிப்பதா? அல்லது வெறும் வாக்காளர்களாக இருக்கப்போகிறார்களா? வடகிழக்கு இளையோர்களே சிந்தியுங்கள்! இல்லாவிட்டால் தேசம் பறிபோனது போல் தமிழ்த்தேசியமும் முழுமையாக இவர்களால் பறிபோய்விடும் என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...