ஜனாதிபதியின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் – புலம்பெயர் உறவுகளிடம் டக்ளஸ் வேண்டுகோள்

douglas devananda 1

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை நல்லெண்ண சமிக்கையாக புலம்பெயர் உறவுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவினை எந்தவிதமான சஞ்சலமும் இன்றி துணிச்சலாக வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி. கட்சி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைுவேற்றும் வகையில் சுமார் 10 அம்சக் கோரிக்கை முன்வைத்திருந்தது.

அதில் ஒன்றாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடை நீக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தினை புலம்பெயர் உறவுகள் சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி, நாட்டில் வாழ்ந்து வருகின்ற தங்களுடைய உறவுகளின் பொருளாதார பலத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையிலாயினும் நிறைவேற்றப்படுவதுடன், தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் அமைப்புக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version