” ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு யுக்தியாகவே ‘தேசிய பேரவை’ ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்படியான பேரவைகளால் பிரச்சினைகள் தீராது. எனவே, முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
” தேசிய பேரவை” என்பது கண்துடைப்பு நாடகம், அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லெண்ணத்தை கொண்டிருக்கவில்லை.” – எனவும் சிறிதரன் எம்.பி. கூறினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான தீர்மானத்தை பிரதமர் முன்வைத்தார். சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட இந்த பேரவையில் ஆளும் மற்றும் எதிரணிகளின் சார்பில் 35 எம்.பிக்கள் இடம்பெறலாம். கூட்ட நடப்பெண் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இதற்கு முன்னரும் பல பேரவைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதா, எனவே, நீங்கள் அமைக்கும் பேரவைகளில் நாம் எந்த அடிப்படையில் அங்கம் வகிப்பது?
பொருளாதார ரீதியில் அரசாங்கம் சிக்கியுள்ளது. அதேபோல ஜெனிவாவில் இருந்தும் அழுத்தங்கள் வலுத்துள்ளது. இந்நிலையில் உலகை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. அதற்கானதொரு யுக்தியாக இந்த பேரவை அமையலாம்.
நல்லாட்சியின்போது இந்த நாடாளுமன்றம் அரசியல் நிர்ணயச்சபையாக மாற்றப்பட்டது. அரசியல் தீர்வு தொடர்பில் இடைக்கால அறிக்கையும் முன்வைக்கப்பட்டது. பேச்சுகள் நடத்தப்பட்டன. வரும் ஆனால் வராது என்பதுபோல எதுவும் நடக்கவில்லை.
எனவே, பேரவைகள் அமைக்கும் யோசனைகளை கொண்டுவரவேண்டாம், இந்த நாட்டில் பிரதான பிரச்சினை எது, அதற்கு எப்படி தீர்வை வழங்குவது என்பதை கண்டறியுங்கள். தமிழர்களின் தேசியப்பிரச்சினையை தீர்த்து வைக்காமல், இந்நாட்டில் எதுவும் நடக்கப்போவதில்லை
10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத இந்த அரசாங்கம் எப்படி, தேசிய பேரவை ஊடாக தீர்வை தரும், இது ஒரு பம்மாத்து நடவடிக்கை . பத்தோடு பதினொன்றாக இல்லாமல் போய்விடும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment