பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தால், அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இன்றைய (17) விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பனாமுரே பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இந்திக்க ஜயரத்ன தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயங்களை முழுமையாக நம்ப முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
மதுஷாக இருக்கலாம், கொலைகாரராக இருக்கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர்கள் உயிரிழந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் .
இது தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டில் மீண்டுமொரு இந்திகவை உருவாக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு நீண்ட நாட்களாக அடிமையான இந்திக்க, அவரது மனைவி பிள்ளைகளை தொடர்ந்து தாக்கி வருவதாக பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 11ஆம் திகதி அவரது மகள், தந்தையான இந்திக தன்னை தடியால் தாக்கியதாக கூறி முறைப்பாடு பதிவு செய்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் அவரை தேடிவந்த நிலையில் நேற்றிரவு (16) 10.30 மணிக்கு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், அதிகாலை 3.30 மணிக்கு சிறையில் உள்ள கம்பியில் தனது சேர்ட்டை பயன்படுத்தி தூக்கிட்டுள்ளார். அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment