அரசு வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை! – ஹக்கீம்

WhatsApp Image 2022 03 30 at 5.35.34 AM

13 ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஏற்படுகின்ற அளவுக்கு அரசு வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை. தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார்.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (29) நடைபெற்றது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பரும் கலந்துகொண்டார்.

அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சு தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ், முஸ்லிம்களை உள்வாங்கும் விடயமாகும் உத்தியோகபூர்வ அறிக்கைகளில், தமிழ்பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை கையாள்வதற்கான முஸ்லிம் தரப்பின் கருத்தை இந்திய தரப்பினர் அங்கீகரித்தனர்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, முஸ்லிம்களின் அபிலாசைகள் குறித்த விவகாரங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் தரப்பின் பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிந்துணர்வுடன் செயற்பட்டது.

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் அக்கறையுடன் மிகவும் நிதானமாக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதையும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இந்திய உதவியுடன் அமுல்படுத்தப்படும் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி திட்டங்களில் மூதூர், ஒலுவில் போன்ற துறைமுகங்களையும் உள்வாங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான மத, கலாசார விவகாரங்களில் சகல இனங்களும் இந்திய துணைக் கண்டத்துடன், இலங்கையுடன் தொடர்புபட்டு வளர்ச்சியடைந்துள்ளன. இதனை மேம்படுத்துவதற்கு சகல மதங்களையும் முதன்மைப்படுத்திய தொடர்பாடல் முறையொன்றை இந்தியா முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை இதன்போது வெளியிடப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version