“யாழ்ப்பாணத்தின் மூளாய் மண்ணைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்ட இ.கிருஷ்ணராஜா ஐயா இன்று அமரத்துவம் அடைந்த செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“எமது மாவட்டத்தின் முதுபெரும் அரசியல் தலைவரான அவருக்கு, கிளிநொச்சியின் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் கணிசமான பங்குண்டு. 1950களின் பின்னரான அரசியல் வரலாற்றில், கிளிநொச்சி மாவட்டத்துக்கெனத் தனித்துவமான அரசியல் கலாசாரத்தைக் கட்டி வளர்த்த பெருமையும் அவரையே சாரும்.
எனது தந்தையார் சின்னத்துரை சிவஞானம், மாமனார் கந்தையா பொன்னுத்துரை (அப்பையா) ஆகியோரின் நெருங்கிய நண்பராக இருந்தமையும், தனது சிந்தனை, செயல்களின் வழி இந்த மாவட்டத்தை நேசித்த ஓர் தனிப்பெரும் மனிதனாக வாழ்ந்தமையும் அவருக்கும் எனக்குமிடையே இருந்த மிக நெருக்கமான உறவுநிலைக்குக் காரணமாயிற்று.
இத் தனிமனித உறவுநிலைகளுக்கு அப்பால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆணிவேராக இருந்து, அந்தக் கட்சிக்கும், கட்சி நலன்களைக் கடந்து இந்த மாவட்டத்துக்கும் மகத்தான பணியாற்றி இன்று இவ்வுலக வாழ்வை நீத்த ஐயாவின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றேன்” – என்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment