20220617 111321 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் போராட்டம்! – சிவில் அமைப்புகள் அழைப்பு

Share

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தென்மராட்சி சிவில் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தார்.

இவ் ஊடக சந்திப்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தென்மராட்சி சிவில் அமைப்பின் பிரதிநிதி க.அருந்தவபாலன் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் 50 ஆம் கூட்டத்தொடரில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் அதை முற்றாக நிராகரிக்கிறோம்.

2021 ஜனவரி 15 ஆம் திகதியன்று அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் குடிசார் அமைப்புகளும் இணைந்து ஒற்றுமையாகக் கோரியிருந்தது போல, சிரியாவுக்கு ஏற்படுத்தப்பட்டதைப் போல முற்றிலும் சுயாதீனமான, சர்வதேச, விசாரணைப் பொறிமுறை ஒன்று நேரடியாக ஐ.நா. பொதுச்சபையின் கிளையமைப்பாக உருவாக்கப்படவேண்டும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலேற் அம்மையாரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவதற்கு முன்னதாக அவரது அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறையை மேலும் கனதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தரமுயர்த்தவேண்டும். அதற்கேற்ற நிதி உதவியை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்.இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப் போக்க நிதி உதவி செய்ய முன்வரும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தீவில், குறிப்பாக வடக்கு-கிழக்கில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் போக்கி, ஈழத்தமிழர் தேசத்துக்கும் தமிழ்பேசுவோர் உள்ளிட்ட எந்த ஏனைய மக்களுக்கும் எதிரான இன அழிப்போ ஒடுக்குமுறையோ தொடராத வகையில் அரசியல் உறுதிநிலையைத் தீவில் ஏற்படுத்தியே உதவியைச் செய்ய முன்வரவேண்டும். ஏற்கனவே சமாதானப் பேச்சுக்கள் குழப்பப்பட்டதற்கும், சுனாமி அனர்த்தத்தின் பின்னான மீள்கட்டுமானப் பொறிமுறை மறுக்கப்பட்டது போன்றவற்றில் இருந்து கற்ற பாடங்களோடு அரசியல் உறுதிநிலை தொடர்பான காத்திரமான நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களும் மாந்தத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல,
எழுபது வருடங்களாக இலங்கை அரசு ஈழத்தமிழர் தேசத்துக்கு எதிராகப் புரிந்துவருகின்ற குற்றங்களுக்கெல்லாம் குற்றமாகிய இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்குமாறு ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் தகுந்த ஆணை வழங்கவேண்டும். இன அழிப்புத் தொடர்பான தனிநபர் குற்றவியற் பொறுப்பையும் இலங்கை அரசின் பொறுப்பையும் இன அழிப்பைத் தண்டித்துத் தடுக்கும் 1948 சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கும் அப்பால், மனித உரிமை ஆணையாளரும் ஐ.நா. செயலாளர் நாயகமும் நேரடியாக இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஐ.நா. அவையின் அதியுயர் மட்டத்தில் பாரப்படுத்திக் கையாளவேண்டும்.

தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பொறுப்புக்கூறல் சர்வதேச மட்டத்தில் கையாளப்படவேண்டும்.
சிங்களப் பெரும்பான்மை ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்குக் கிழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.
தமிழர் தாயகத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், மரபுரிமையை வரலாற்று உண்மைக்குப் புறம்பாக சிங்கள-பௌத்தமாக திரிபுபடுத்துவதை இனிமேலும் நடைபெறாத வண்ணம் நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். முழுமையான மீள்குடியேற்றமும் காணி உரிமைகளும் தமிழ்பேசும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

இலங்கையின் அரசாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிப் போராடும் தென்னிலங்கை மக்கள், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமான வடக்கு-கிழக்கை உரிய முறையில் அங்கீகரிக்கவும், அரசியல் வேணவாவைப் புரிந்து, அங்கீகரித்து, தேசிய இனச் சிக்கலுக்கு ஏதுவான அரசியலமைப்பு மாற்றங்களையும் ஒரு சேரச் சேர்த்துக் கோரவேண்டும். தமிழ் மக்களின் நினைவுத்திற உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும். ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நீண்டகாலமாக இனப் பிரச்சனையைத் தீர்க்காததன் ஒரு பக்க விளைவே என்பதைப் புரிந்துசெயற்பட முன்வரவேண்டும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...