பிரதி சபாநாயகராக நேற்று (05) தெரிவுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப் பதவியை மீண்டும் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான ‘பதவி துறப்பு’ கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று (06) அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்து, அப் பதவிக்கே மீண்டும் தெரிவாகி, 24 மணிநேரத்துக்குள் மீண்டுமொருமுறை இராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்துள்ளமையானது, அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுடனான, ‘அரசியல் உறவை’ ஏப்ரல் 05 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முறித்துக்கொண்டது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முடிவையும் எடுத்தது.
இதனையடுத்து சுதந்திரக்கட்சி உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார். எனினும், அவரின் பதவி துறப்பு கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஜனாதிபதி விடுத்த கோரிக்கையின் பிரகாரம் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை அப்பதவியில் நீடிக்க தீர்மானித்தார்.
பிரதி சபாநாயகரின் இராஜினாமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவலை மே 04 ஆம் திகதியே ஜனாதிபதி, சபாநாயகருக்கு தெரியப்படுத்தினார். இதன்பிரகாரம் மே 05 ஆம் திகதி புதிய பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு 148 வாக்குகளும், இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 8 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்ல.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு ஆதரவு வழங்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் முடிவெடுத்திருந்தது. அவரின் பெயரை நிமல் சிறிபாலடி சில்வா முன்மொழிவதற்கும், அதனை ராஜித சேனாரத்ன வழிமொழிவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஆதரவை ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வழங்கியதால், ஐக்கிய மக்கள் சக்தி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை களமிறக்கியது.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு சஜித் அணி ஆதரவு வழங்கியிருந்தால், அவருக்கு எதிராக சித்தார்த்தனை களமிறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டிருந்தது. இம்தியாஸ் களமிறக்கப்பட்டதால் அவரை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது.
பிரதி சபாநாயகருக்கு, ஆளுங்கட்சி ஆதரவு வழங்கியமை பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது எதிரணியினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதவி துறக்கும் முடிவை ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எடுத்துள்ளார். அதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
அதேவேளை, இலங்கை அரசியலில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் முக்கிய சில மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கிய இராஜினாமாவொன்றும் இடம்பெறவுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுவருவதாக தகவல்.
ஆர்.சனத்
Leave a comment