பணிப் புறக்கணிப்பினை தொடர்ந்து மேற்கொள்வது தொடர்பில் நாளை(10) காலை 10 மணியளவில் கூடும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,
இன்றைய தினம் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டிருந்த மக்கள் மீது பொலிஸார் முன்னிலையில் தொடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து ,உடனடியாகக் கூடிய எமது பொதுக்குழுவானது பிற்பகல் 2 மணியில் இருந்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்தது.
எம்முடன் வைத்திய நிபுணர்களின் அமையம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. அந்த வகையில் அரச வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளில் இருந்து வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
எனவே, எமது மக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு வந்து அலைய வேண்டாம். தீவிர நோய் எனக் கருதுமிடத்து உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடவும். மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதற்காக மக்களோடு நாம் உள்ளோம் என்பதனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம் – என்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment