இலங்கைசெய்திகள்

கொலையாளிகளை பாதுகாக்கும் சமய மற்றும் அரசியல் தலைவர்கள்

Share
tamilni 333 scaled
Share

கொலையாளிகளை பாதுகாக்கும் சமய மற்றும் அரசியல் தலைவர்கள்

தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கக் கூடாது என்ற உள்நோக்கம் கொண்ட சமய மற்றும் அரசியல் தலைவர்கள் இருப்பது நாட்டுக்கு சாபக்கேடு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (27.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயிர்ப்பு தின குண்டுவெடிப்பு தொடர்பான சனல் – 4 ஆவணப்படத்தின் பின்னர் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என எதிர்பார்த்திருக்கையில் “சர்வதேச விசாரணை வேண்டாம்” எனும் குண்டினை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீசியதை தொடர்ந்து கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித்தும் வீசியுள்ளார்.

இருவரின் நோக்கம் ஒன்றே. உள்ளகவிசாரணையென கொலையாளிகளை பாதுகாப்பதும் யுத்த குற்றங்கள் என சர்வதேசம் உள்வந்து தமிழர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கக் கூடாது என்னும் குறுகிய உள்நோக்கம் கொண்ட மனநிலையாகும். இத்தகைய சமய மற்றும் அரசியல் தலைவர்கள் இருப்பதே நாட்டுக்கு சாபக்கேடு.

இதனை நடுநிலை நீதி செயற்பாட்டாளர்கள் வன்மையாக எதிர்க்க வேண்டும். மைத்திரிபால சிறிசேன குண்டுவெடிப்பு காலத்தில் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்பதற்காக நீதிமன்ற தண்டனையை பெற்றிருப்பவர். ஆயர் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு செம்பு தூக்கியாக செயற்பட்டவரே.

இருவரும் தமிழர்களுக்கு எதிரான இனவாத நோக்கு நிலையில் இருந்து சர்வதேச விசாரணை வேண்டாம் எனக் கூறுவது தன் தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்வதற்கு சமமாகும். ஆனால் தமிழர்கள் இதனை ஆச்சரியத்தோடு பார்க்கவில்லை. இதுதான் அவர்களின் உண்மை தமிழர் எதிர்ப்பு மனநிலை.

முதலாமவர் இறுதி யுத்த காலத்தில் தானே பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தேன் என இனப்படுகொலை வெற்றி அரசியலில் தமக்கும் பங்கு உண்டு என காட்டத் துடிப்பவர்.

இரண்டாமவர் வடகிழக்கில் அரச படையினர் வான்வெளி மூலமாகவும் பயங்கர ஆயுதங்களை பாவித்தும் புரிந்த கொலைகளுக்கு அமைதி காத்து அனுமதித்து உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புக்கு மட்டும் சுயநல அரசியல் நோக்கோடு நீதி குரல் கொடுத்தவர்.

இவர் முதலில் குற்றத்தை ஏற்றுக் கொண்டால் மன்னிப்பு என்றவர் தற்போது உள்ளக விசாரணை போதும் என்கின்றார்.

உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு என்பது தெரிந்தும் அது போதும் என்பது நீதியை குழி தோண்டி புதைப்பதாகும்.

தெற்கில் நடந்த 1988/ 89 மக்கள் விடுதலை முன்னணியினரின் இளைஞர் கிளர்ச்சியின் போது படலந்த எனுமிடத்தில் பாடசாலை சிறுவர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதியை பெற்றுக் கொடுப்பேன் எனக் கூறி 1995ல் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க பதவிக்கு வந்ததும் அதனை கையில் எடுக்கவில்லை.

அதேபோன்று அதே கிளர்ச்சியில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பாக ஊடகவியலாளர் திஸ்சநாயகத்தின் துணையோடு தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு அன்று ஜெனிவா நோக்கி சென்ற மகிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதியானதும் அதனை கைவிட்டது மட்டுமல்ல யுத்த குற்றங்கள் தொடர்பில் திஸ்சநாயகம் வெளிக் கொண்டிருந்த அறிக்கை தொடர்பில் இருவர் 20 வருட தண்டனைக்குள் தள்ளியவரும் அவரே.

மேலும் கோட்டாபய ராஜபக்ச மாத்தலை பகுதிக்கு பொறுப்பாக இருந்த 1988/89 காலப்பகுதியில் கொல்லப்பட்டதாக கூறப்படும் மனித புதைகுழி மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட போதும் அது தொடர்பான விசாரணையை துரித படுத்துவதற்கோ, சர்வதேச விசாரணை கோரியோ மக்கள் விடுதலை முன்னணி குரல் எழுப்பவில்லை.காரணம் இராணுவத்தை பகைத்துக் கொள்ள கூடாது என் மனநிலையாகும்.

இவர்கள் வடகிழக்கில் பாரிய ஆயுதங்கள் பாவித்து படையினர் புரிந்த படு கொலைகளுக்கு அமைதி வழியில் நின்று ஆதரவு வழங்கியவர்களுமாவர்.

தங்களுடைய இனத்தவர்களுக்கு, சமயத்தவர்களுக்கு, கட்சியினருக்கு எதிராக நிகழ்ந்த திட்டமிட்ட படுகொலைகளுக்கு நீதியை பின் தள்ளி புதைக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு எதிராக இருந்த யுத்த குற்றங்கள் தொடர்பிலே நீதியை என்றுமே பெற்றுக் கொடுக்க அல்லது பெற்றுக் கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை.

அரசியல் படுகொலையாளிகள் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குவதற்கான சட்டம் கொண்டு வர முயற்சிப்பது அடுத்த கட்ட அடக்கு முறையையும் படுகொலையையும் நியாயப்படுத்தவே என்பதை தெற்கின் முற்போக்கு சக்திகள் உணர்ந்து வடகிழக்கின் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

வடகிழக்கில் மற்றும் மலையகத்தில் அரசியல் தலைமைகள் தனது சிகப்போக அரசியல் போகாது எதிர்கால அரசியல் அபாயத்திற்கு முகம் கொடுக்கவும் மலையத் தமிழர்களின் தேசியம் காக்கவும் உறுதியான அரசியல் பாதையை பாதையை வகுத்து மக்கள் சக்தியோடு பயணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...