இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருக்கின்றனர் என்று உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரகாரம், நாட்டில் 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் எனவும், அவர்களில் 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவருவதால் கடந்த ஜூனில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விலை அதிகரிப்பின் காரணமாக போசணை குறைப்பாடுகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் அதாவது 61 சதவீதமானோர் குறைந்த விருப்பமான மற்றும் குறைவான சத்துள்ள உணவை உண்பது மற்றும் உண்ணும் உணவின் அளவைக் குறைப்பது போன்ற உத்திகளை பயன்படுத்துகின்றன.
மேலும் ஐந்தில் இரண்டு குடும்பங்கள் போதுமான உணவுகளை உட்கொள்வதில்லை. பெருந்தோட்டத் துறையில் வாழும் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது.
அவர்களில் 50 சதவீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளன. உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் சமாளிக்கும் உத்திகளின் அனைத்து நடவடிக்கைகளிலும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை விட, பெருந்தோட்ட குடும்பங்கள் தொடர்ந்து மோசமான விளைவுகளைக் எதிர்கொண்டுள்ளனர்.
நகர்ப்புற குடும்பங்கள் தற்போதைய நிலைமையை சமாளிப்பதற்கு சேமிப்பைக் குறைக்கும் அதேவேளையில், பெருந்தோட்ட மக்கள் உணவு மற்றும் பிற தேவைகளுக்காக கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 200,000 குடும்பங்கள் அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
#SriLankaNews
Leave a comment