இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் பலரும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் சர்வதேச கல்வியகத்தின் உயர்நிலைக் குழுவுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடியுள்ளனர்.
இக் கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பள்ளிசெல் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலநிலை, கல்விக்கான அதிகரித்த செலவீனம், போக்குவரத்து சிரமங்கள், அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் துயரநிலை போன்ற பல்வேறு விடங்கள் குறித்து எடுத்தியம்பப்பட்டுள்ளது.
ZOOM மூலமாக நடைபெற்ற இந்தக் கருத்துப் பகிர்வில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகரும், சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குநருமான திரு.த.மகாசிவம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் சர்வதேச பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளருமான திருமதி. ஈ.ஜெ.மகேந்திரா, சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், சங்கத்தின் சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளர் சி.சசிதரன், சங்கத்தின் வடக்கு மாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் ஏ.பாலசிங்கம் ஆகியோரோடு பெண்கள் வலையமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் கல்விக்காக பெண்களின் பங்களிப்பு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் உரையாடப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களின் போசாக்கு நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இது போன்று முன்பு நடைபெற்ற கலந்துரையாடல் மூலமே நிறுத்தப்படவிருந்த உலக உணவுத்திட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் மீண்டும் செயற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment