பெற்றோர்களின் சொத்துக்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் அவர்களைக் கைவிட்டுச் செல்லும் பிள்ளைகளிடமிருந்து அச்சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்துவதற்கான புதிய சட்ட விதிகளையும் நடைமுறைகளையும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது உரிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் அடிப்படையில், பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோர்களை அரசாங்கமே பொறுப்பேற்று முழுமையாகப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதேநேரம், அவ்வாறு கைவிடப்படும் பெற்றோரின் சொத்துக்கள் பிள்ளைகளின் வசம் இருக்கும் பட்சத்தில், சட்டரீதியான ஒழுங்குமுறைகளின் கீழ் அவற்றை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது (அரசுடைமையாக்குவது) குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
பெற்றோரின் வாழ்நாள் உழைப்பில் உருவான சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு, அவர்களைப் பாராமரிக்காமல் கைவிடுவது மிகவும் கொடூரமான செயல் மாத்திரமன்றி, அது பெற்றோர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் ஒரு செயலாகும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சமூக அவலங்களைத் தடுத்து, முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த புதிய சட்டவரைபைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்படும் அல்லது குடும்பத்தினரால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெற்றோர் மற்றும் முதியவர்கள், அதுகுறித்த தகவல்களை உடனடியாக அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக விசேட தகவல் கட்டமைப்பு மற்றும் அவசர ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.