இலங்கையின் பொருளாதார மீட்சி செயன்முறையைத் துரிதப்படுத்துவது குறித்து சர்வதேச நாடுகளின் வர்த்தக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.
சர்வதேச நாடுகளால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் வர்த்தக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த செவ்வாய்கிழமை புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் பெலாரஸ், சைப்ரஸ், எதியோப்பியா, ஜோர்தான், கென்யா, அயர்லாந்து, பேரு மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வர்த்தக உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரத்தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் குறி;தது ஆராய்வதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.
அதன்படி இச்சந்திப்பில் கலந்துகொண்ட இராஜதந்திரிகளுக்கு இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு, இந்திய ரூபா மூலமான வர்த்தக நடவடிக்கைகள், இந்தியாவுடனான பொருளாதார செயற்திட்டங்கள் என்பன தொடர்பில் விளக்கமளித்த உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் நிதியியல் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்பன பற்றியும் விளக்கமளித்தார்.
அதேவேளை இச்சந்திப்பின்போது வர்த்தகத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு நாடுகளுக்கு இடையில் வலுவான பொருளாதாரத்தொடர்புகள் கட்டியெழுப்பப்படவேண்டியது அவசியம் என்று இராஜாதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டார்.
Leave a comment