எமது உரிமையை பறிப்பது மிலேச்சத்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தன்னை கைது செய்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு சுடரேற்ற நான் தயாராகும் போது அங்கு நின்ற பொலிஸார் என்னை தடுத்தனர். நான் அவர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கிறதா என கேட்டேன்?
ஆனால் அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவை காண்பிக்கவில்லை. உங்கள் உரிமையை பறிக்கும் உங்களது செயலை நாங்கள் ஏற்க முடியாது என நான் பொலிஸாருக்கு தெரிவித்தேன்.
இதனால் நினைவிடத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் நினைவிடத்தின் முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் மிலேச்சத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் அதனை காலால் தட்டி அணைத்தார்கள்.
எங்களுடைய உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நினைவுகூரும் உரிமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.
சட்டம், ஒழுங்கு என்ற போர்வையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள– பெளத்த மேலாண்மையை நிலை நிறுத்தி கொள்கின்றனர். இது தமிழர்களுடைய உணர்வுகளை பறிக்கும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment