சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

tamilni 643

சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனுடன் இணைந்து தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்டவர்களுள் பேரறிவாளனும் ஒருவராவார்.

குறித்த வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலையானதில் பாரிய பங்கு அவரது தாயார் அற்புதம்மாளுக்கு உண்டு. பேரறிவாளனின் விடுதலைக்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தநிலையில், வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்ட பல தரப்புக்களுக்கு சாந்தன் குடும்பத்தார் கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர் நாட்டுக்கு திரும்பும் தருணத்தில் உடல் நிலை மோசமடைந்து நேற்று காலை சென்னையில் உயிரிழந்தார்.

தற்போது சென்னையில் உள்ள சாந்தனின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலிகளை செலுத்தி வரும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் அஞ்சலி செலுத்தியதுடன், சாந்தனின் உடலைக் கண்டு கதறி அழுதுள்ளார்.

Exit mobile version