அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று (02) தலவாக்கலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்;
“ புதுவருடம் பிறந்தாலும் இன்னமும் வழி பிறக்கவில்லை. இன்று எந்த வரிசையில் நிற்கவேண்டி வருமோ என்ற அச்சத்துடன்தான் பொழுதுவிடிகின்றது. அரசு வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது.
நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது 32 வருடகால அரசியல் வாழ்வில் எந்தவொரு அரசும், இப்படியானதொரு வீழ்ச்சியைக் கண்டதில்லை.
ஜனாதிபதி செயலாளரை மாற்றினர். தற்போது மேலும் பல அரச அதிகாரிகளை மாற்ற தயாராகிவருகின்றனர். இதற்கிடையில் அமைச்சரவையும் மாற்றப்படவுள்ளதாம். இப்படி ஆட்சிகளை மாற்றிக்கொண்டிருந்தால் தீர்வு கிட்டுமா?
அக்கரப்பத்தனையில் உள்ள கோவில் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 60, 70 சிலைகள் இனந்தெரியாத நபர்களால் தேசமாக்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான செயலாகும். இதற்கு முன்னர் லிந்துலை பகுதியில் மாதா கோவிலின் சிலை சேதமாக்கப்பட்டது.
தற்போது இந்து கோவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவா இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறுகின்றன என்ற சந்தேகமும் எழுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. எனவே, இதன் பின்னணியில் குழுவொன்று செயற்படுகின்றதா என்பதும் கண்டறியப்பட வேண்டும்.
அரவிந்தகுமார் நல்லவர்தான். ஆனால் அவர் இருக்கும் இடம்தான் சரியில்லை. 2013 இல் மாகாணசபைத் தேர்தலில் தோற்றார். ஆனால் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார்.
அதற்கு அவர் அங்கம் வகித்த மலையக மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசியக்கட்சியுமே காரணம். 2020 இலும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்கும் அவர் மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகித்த்தே காரணம்.
செந்தில் தொண்டமானுக்கு செல்வாக்கு இருந்தும், பண பலம் இருந்தும் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை. ஏனெனில் அவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம் இருக்கின்றது. இந்நிலையில் நுவரெலியாவில் வந்து போட்டியிடுவேன் என அரவிந்தகுமார் அறிவித்துள்ளார். வரட்டும் பார்ப்போம்.
தமிழக மீனவர்களுக்கும், யாழ்ப்பாண மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க வருபவர்கள் தமிழர். அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து மீன்பிடிக்க செல்பவர்கள் தமிழர்.
எனவே, தமிழர்கள் மோதிக்கொண்டால் அதன்மூலம் மற்றைய தரப்புக்குதான் நன்மை. இந்த விடயத்தையும் அரசு திட்டமிட்டு செய்கின்றதா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கின்றது. எனவே, நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment