tamilnih 112 scaled
இலங்கைசெய்திகள்

போர்க்குற்றம் குறித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான புதிய அறிக்கை

Share

போர்க்குற்றம் குறித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான புதிய அறிக்கை

இலங்கையில் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முக்கிய வகிபாகம் கொண்டிருந்ததற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

‘இலங்கை அதன் வன்முறை நிறைந்த கடந்தகாலப் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையுடன் இருக்குமாயின், போர்க்குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருந்த வகிபாகம் தொடர்பாக அவரைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டும்” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பின் (ITJP) நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பதவிவகித்த போது, 2009 இல் சண்டைக் களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியமைக்கான விரிவான ஆதாரங்களை இப்புதிய அறிக்கை கொண்டிருக்கின்றது.

கோட்டாபய இராணுவத்தளபதியாக இல்லாதபோதிலும்கூட, பாதுகாப்புப் படைகளுக்கு கட்டளையிட்டதுடன், அவர்கள் மீதான செயற்றிறன் மிக்க கட்டுப்பாட்டினையும் கொண்டிருந்தார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டமும் சர்வதேச குற்றவியல் சட்டமும் மீறப்பட்டுக்கொண்டிருந்தமை தொடர்பாக அவருக்கு அப்போதே நன்கு தெரிந்திருந்ததுடன், அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தவறியதுடன், அல்லது, தனக்குக் கீழே செயற்பட்டவர்களைப் பொறுப்புக்கூறவைக்க முயலவுமில்லை என்பதை இவ்வறிக்கை காட்டுகின்றது.

பாரதூரமான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நம்பகரமாக விசாரணைகளைத் தொடங்குவதற்கும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் போர் முடிந்தபின்னர் அவருக்கும், தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புக்கள் இருந்தன.

உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, கோட்டாபயவும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளும் பாதுகாப்புப் படைகள் இம்மீறல்களில் ஈடுபட்டமையை முழுமையாக மறுத்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றார்கள்.” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட போர்த்தடை வலயங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் கோட்டாபய ராஜபக்ச கொண்டிருந்த வகிபாகத்தினையும், விசாரணைகளற்ற படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறை, பாலியல் வன்புணர்ச்சி, எழுந்தமானமாகத் தடுத்துவைத்தல், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதைத் தடுத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு அவர் தவறியமையும் தொடர்பான ஆதாரங்களை 96 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை (இவ்வறிக்கையின் தமிழ்வடிவம் 100 பக்கங்களைக் கொண்டுள்ளது) ஆய்வு செய்கின்றது.

1989: இலங்கையில் 1980களில் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற முன்னைய வன்முறைக் காலப்பகுதியின் போது, பாரிய வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களில் கோட்டாபய ராஜபக்ச ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வு செய்து 2022 இல் ITJP’யால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக இவ்வறிக்கை வெளிவருகின்றது.

1989 இல் மாத்தளை மாவட்டத்தில் இளம் இராணுவ அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச, அங்கே-பெரும்பாலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 700 இற்கும் மேற்பட்ட மக்கள் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் காணாமல்போனமைக்கு காரணமாக இருந்தார்.

அக்காலப்பகுதியில் பணியிலிருந்த அவரும், அவருடைய படை உதவியாளர்களும், பதவி உயர்வுகள் பெற்று, 2009 சண்டையின்போது முக்கிய பதவிகளில் இருந்தார்கள்.

இவர்களில் ஒருவர், அமெரிக்க அரசாங்கத்தால் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்று பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் கூட, தற்போது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகப் பதவி வகித்துக்கொண்டிருக்கின்றார்.

ITJP’யால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றையடுத்து, ஐ.நா. வல்லுனர்கள், எண்பதுகளின் பிற்பகுதியில் நடந்த வன்முறைகளில் கோட்டாபயவின் வகிபாகம் தொடர்பாக விசாரணைகளை செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு 2022ஆம் ஆண்டில் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினர். இன்றுவரை இதற்கான எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.

கடந்த காலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உண்மையைக் கண்டறியும் குழு ஒன்றினை ஆரம்பிக்கப்போவதற்காக இலங்கை அரசாங்கம் கூறும் நிலையிலும் 2015இல் அது இவ்வாக்குறுதியை வழங்கியிருந்தது.அது எந்தப் பதிலையும் வழங்கவில்லை.

“தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் எதிராக வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகவும் மோசமானவராக கோட்டாபய ராஜபக்சவே இருக்கமுடியும்.

1989 தொடக்கம் 2009 வரைக்கும், அத்துடன் இன்று வரைக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கு காணப்படுகின்றது.

பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படாமலும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமலும் உள்ளன் இவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏமாற்றத்தினையும் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையையும் ஏற்படுத்தின.

குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறவைக்காமல், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தேவைப்படும் மீளவும் நிகழமாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தினை வெறுமனே ஆணைக்குழுக்களின் விசாரணைகளால் பெற்றுவிட முடியாது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் வைத்து கோட்டாபயவுக்கு எதிராக சித்திரவதையில் ஈடுபட்டார் என்று குடியியல் வழக்கொன்றினைப் பதிவுசெய்வதற்காக சித்திரவதையால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு ITJP உதவி செய்தது.

ஆனால், அந்த ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அரசத்தலைவர் என்ற ரீதியில் அதிலிருந்து விலக்கினைப் பெற்றிருந்தார்.

சிங்கள பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் படுகொலையில் சம்பந்தப்பட்டார் என குற்றஞ்சாட்டி இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

2022இல், பொருளாதாரத்தின் முகாமைத்துவச் சீர்கேடு தொடர்பாக கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

அவர் சிங்கப்பூருக்குத் தப்பியோடினார், அங்கே அவருக்கு எதிராக போர்க்காலத்தில் அவரது வகிபாகத்திற்கு எதிராக குற்றவியல் முறைப்பாடு ஒன்றினை ITJP சமர்ப்பித்தது, ஆனால் அவர் விரைவிலேயே இலங்கைக்குத் திரும்பிச் சென்றார். அங்கே ஜனாதிபதி மாற்றம் நிகழ்ந்த போதிலும், தொடர்ந்தும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்சவையும் அவரது சகோதரரையும் தடைசெய்ததன் மூலம் கனடா நாடு வழிகாட்டியாக அமைந்தள்ளது.

எனினும், இலங்கைக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நா. செயற்றிட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வாக்களித்த நாடுகள் உட்பட இதர நாடுகள் இதில் தயக்கம் காட்டிவருகின்றன.

பொருளாதாரப் பிரச்சினையின் நெருக்கடி நிலையில், பாரிய மனித அநீதிகளுக்குப் பாதுகாப்புப் படையினரைப் பொறுப்புக்கூற வைப்பது தங்களால் முடியாத காரியம் என்று தற்போதைய அரசாங்கம் வாதிடுகின்றது. இதே வாதங்கள் தான் கடந்த காலத்திலும் முன்வைக்கப்பட்டதுடன், தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கினைத்தான் ஆழவேரூன்ற வைத்துள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...