அரசால் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாட்டை அகற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன் வெளியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தையில் அரிசிக்கு ‘செயற்கை தட்டுப்பாடு’ ஏற்படாது தடுக்க ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையால் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கீரி சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு சாம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாடு மற்றும் வெள்ளை மற்றும் சிவப்பு மூல அரிசி ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கும் வர்த்தமானி கடந்த செப்ரெம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
எனினும், அதற்கான வர்த்தமானி அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதியை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Leave a comment