நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணமான ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,
” அரசாங்கமானது அரச வருமானத்தை அதிகரிப்பதற்கோ, ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவோ, நீண்ட காலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை வருமானம் ஈட்டக் கூடிய அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
உற்பத்திகளை அதிகரிக்கவோ திட்டங்களை தயாரிக்கவோ முறையான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை
அந்த வகையில் வருடக் கணக்கில் தொடர்ந்த ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியிலேயே நாடு தற்போது அகப்பட்டுள்ளது.முறையான பொருளாதார திட்டங்கள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
நாட்டு மக்கள் ஏழ்மையில் இருந்தாலும் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர். இது எப்படி நடந்தது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான
பணத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமையே அதற்கான காரணமாகும். அதன் பாதிப்பையே மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் பலவற்றை தவறானவை என்று இப்போது நிதியமைச்சர் ஏற்றுக்கொள்கின்றார்.இந்த தவறான தீர்மானங்கள் தெரியாமல் நடந்தவையா? இல்லை. தெரிந்தே நடந்துள்ளன. இதனை சிறிய தவறாக கருத முடியாது. இதற்கு ஜனாதிபதியும் அதேபோன்று அமைச்சரவையும் பொறுப்புக் கூற வேண்டும். நிதியமைச்சரும் தமது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. நாட்டை பொருளாதார ரீதியில் சீர்குலைத்துவிட்டு தவறு நடந்துள்ளது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு காரணமான ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment