பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலம் இல்லாத சஜித் அணியினர் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமானது.
எமது அரசுக்கு எதிரான பிரேரணைகள் தோற்கடிக்கப்படும் என்றும் தெரிந்தும்கூட பிரதான எதிரணியினர் ஏன் அதனைக் கொண்டுவர முயல்கின்றனர் என்று புரியவில்லை.
என்னதான் நடந்தாலும் பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது. எமது அரசைக் கவிழ்க்க முயல்வோர் முதலில் தமது நிலையை உணரவேண்டும்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment