ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில் பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன அம்மையார், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்
காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுப்பதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை தொடக்கம் எதிர்வரும் நவம்பர் 12 வரை, க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெறும் மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment