பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக நிராகரித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான இலக்குகளையும் பின்பற்றி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், முந்தைய அரசாங்கங்களின் கீழ் திறைசேரி கணக்கு நீண்டகாலமாக மேலதிக பற்று (Overdraft) நிலையிலேயே காணப்பட்டதாக ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.
அதன்படி, 2018ஆம் ஆண்டு 180 பில்லியன் ரூபாவும், 2019ஆம் ஆண்டு 244 பில்லியன் ரூபாவும், 2020ஆம் ஆண்டு 575 பில்லியன் ரூபாவும், 2021ஆம் ஆண்டு 821 பில்லியன் ரூபாவும் மேலதிக பற்று காணப்பட்டதாக இவர் தெரிவித்தார்.
ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் 2025 நவம்பர் மாத அளவில், திறைசேரி கணக்கானது 1,202 பில்லியன் ரூபா நேர்மறையான மிகுதியைக் காட்டியுள்ளது.
இது முன்னைய நிலமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 ட்ரில்லியன் ரூபா முன்னேற்றமாகும் என அவர் தெரிவித்தார்.
அண்மைய இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்காக முன்வைக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீட்டிற்கு, அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.