“ நாட்டில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதேபோல தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுடன் அரசியல் தீர்வைக்காணும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார் .
பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று (05.03.2022) மாத்தளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
“ பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என இந் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் வலியுறுத்திவருகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தச்சட்டமூலம் எந்த விதத்திலும் போதாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகள் கருத்துகளை முன்வைத்துள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.
அதேபோல அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என இம்மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச்சட்டம் போதும் என இந்தியா ஏற்கவில்லை. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை அந்நாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை, கருத்தை நாம் வரவேற்கின்றோம். நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவம் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.” – என்றார் சுமந்திரன் எம்.பி.
#SriLankaNews
Leave a comment