ஊரடங்குச் சட்ட தளர்வையடுத்து அரச பணியாளர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவது தொடர்பிலான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செய்லாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச அதிபர்மார், பிரதேச செயலாளர்கள், அரச கூட்டுத்தாபன மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு,
1. அத்தியாவசிய சேவைகளுக்கு தேவைப்பட்டோர் மாத்திரமே கடமைகளுக்கு அழைக்கப்பட வேண்டும். அதனை, அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் தீர்மானிக்கலாம்.
2. உத்தியோகபூர்வ வாகனம் உடையவர்கள், போக்குவரத்து கொடுப்பனவு பெறுவோர் அல்லது அலுவலக வாகன வசதிகளைப் பெறும் அரச உத்தியோகத்தர்கள் வழமைபோல் கடமைக்கு வரலாம்.
3. இவ்வாறு அழைக்கப்படும் பணியாளர்கள் தவிர ஏனையோர் ஒன்லைன் ஊடாக சேவையாற்றலாம்.
4. கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் விசேட தேவையுடைய பணியாளர்கள் இப்போதைக்கு அழைக்கப்பட கூடாது. அவ்வாறானவர்கள் கட்டாயம் அழைக்கப்பட வேண்டுமாயின் அவர்கள் வந்து செல்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
5. அரச பணியாளர்கள் சேவை சமுகமளிப்பின்போது உள்வருகை, வெளிச்செல்லல் பதிவுகள் மட்டும் போதுமானவை.
6. அனைத்து சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படல் வேண்டும்.
7. உள்ளக கருத்தரங்குகள், கூட்டங்கள் இயன்றளவு இணையத்தினூடாக இடம்பெற வேண்டும்.
8. அரச பணியாளர் ஒருவர் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டால் அவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறாத பட்சத்தில் அவருக்கான ஊதியத்தில் குறைப்புச் செய்யப்படக் கூடாது.
9.பதவி உயர்வு, நிரந்தர நியமனம், ஓய்வு பெறுகை தொடர்பிலான சுற்றறிக்கை எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment