உறவை மேலும் வலுப்படுத்துவோம்! – இந்திய உயர் ஸ்தானிகர்

image ab3e3a64fe

இந்தியாவின் 75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு -இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் -இந்திய உயர் ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் இந்தியா கொண்டாடும் நிலையில், இலங்கையிலுள்ள எமது சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இதேவேளை, இலங்கையும் தனது சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டினை எட்டியுள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவினைக்கொண்டாடும் (ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ்) இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் இலங்கை முழுவதும் தொடர்ச்சியான பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் கொண்டாட்டங்களின் மிகவும் முக்கிய நிகழ்வாக இந்தியாவும் இலங்கையும் இணைந்து கொண்டாடும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.

நண்பர்களே, அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் வழிகாட்டல்களின்கீழ் இலங்கை மக்களையும் அவர்களின் நல்வாழ்வினையும் இந்தியா எந்நேரமும் தன்மனதில் கொண்டுள்ளது. எமது சகோதர இலங்கையர்களுக்கான, இந்தியாவின் அர்ப்பணிப்பினைச் சுட்டிக் காட்டும் முகமாக முன்னொருபோதும் இல்லாதவகையில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் இந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான எமது பன்முகப்படுத்தப்பட்ட உதவிகள் ஊடாக இலங்கை மக்களின் பல்வேறு தேவைகளையும் துரிதமாக நிவர்த்தி செய்து கொள்வதற்காக இந்தியாவும் இந்திய மக்களும் முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இருதரப்பு உறவுகள் பல்வேறு புதிய துறைகளிலும் தோற்றம்பெற்று வளர்ந்து வருகின்றன. 2022 மார்ச் மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமயத்தில் இரு அரசாங்கங்களுக்கும் இடையில் எட்டு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமை திட்டம் முதல் பௌத்த தொடர்புகளின் மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஈறாக, பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் வரையிலான பல்வேறு துறைகளையும் சார்ந்ததாக இந்த உடன்படிக்கைகள் அமைகின்றன. எமது உறவின் உத்வேகத்தைக் கட்டியம் கூறுவதாக இவை அமைந்துள்ளன.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உந்து சக்தியை வழங்கும் வினைத்திறன் மிக்க ஒரு பங்காளியாக இந்தியா உள்ளது. துறைமுகங்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி, உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகள் உள்ளிட்ட பரஸ்பரம் நன்மை தரும் வகையிலான இந்திய முதலீடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதிலும் மிகவும் முக்கியமான காரணிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீக ரீதியிலான தொடர்புகள், பொதுவான மரபுகள், மக்கள் இடையிலான பிணைப்புகள் ஆகியவை இந்திய-இலங்கை உறவின் சிறப்பம்சங்களாகும். நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வழித்தடத்தில் இன்று நாம் துரிதமாக முன்னேறி வரும் நிலையில் எதிர்கால சந்ததிக்காக இப்புராதனமான உறவினை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கையிலுள்ள சகல இந்தியர்களுக்கும், இலங்கை சகோதர சகோதரிகளுக்கும் மீண்டும் ஒரு தடவை எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

#India

Exit mobile version