நாட்டில் சட்டஒழுங்கு நிலைநிறுத்தப்படவில்லை! – சரத் பொன்சேகா சாட்டை
இந்த அரசு நாட்டைக் கட்டியெழுப்பும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களை நியமிக்கவில்லை. மாறாக நாட்டு மக்களை அடக்கி ஆள்பவர்களை நியமித்து நாட்டை அடிமைப்படுத்துகின்றது.
இது ஒரு மோசமோன நிலை. இந்த முறையால் அவர்களுக்கு நெருக்கமான அறிஞர்களும் இந்த அரசை கொண்டுவர தியாகம் செய்த அறிஞர்களுமே அரசின்மீது விரக்தி அடைந்து தங்கள் பதவியை வருத்ததுடன் விட்டுச் செல்கின்றனர்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று அப்பாவி கைதிகளை முழங்காலிட்டு கைத்துப்பாக்கியுடன் சென்றிருக்கிறார். அங்கு கைதிகளை மண்டிய வைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது எவ்வளவு கொடூரமான செயற்பாடாகும்.
நானும் சிறைகளில் இருந்தேன். அங்குள்ள துக்க துயரம் எனக்கும் தெரியும். இது போன்ற நபர்கள் வந்தால், அவர்களை சகலரும் ஒன்றிணைந்து எலும்புகளை நசுக்கி வெளியேற்ற வேண்டும்
தற்போது அரசாங்கம் அவரை சிறைச்சாலைகள் அமைச்சிலிருக்கும் பதவியில் இருந்து மட்டுமே நீக்கியுள்ளது. அவரிடம் இன்னுமொரு அமைச்சும் உள்ளது. இவர் தொடர்பான நாடாளுமன்ற நடத்தையை கூட ஏற்க முடியாது.
ஒரு நபருக்கு தற்காப்புக்காக மட்டுமே கைத்துப்பாக்கி வழங்கப்படுகிறது. ஒரு அப்பாவி கைதியின் தலையில் கை கட்டப்பட்டு கைத்துப்பாக்கி தலையில் வைக்கப்பட்டால் அது பாரதூரமானது. அது ஒரு வன்முறைச் செயல். அந்த நபருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
தற்போது இவருக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாமல் கண்துடைப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரின் நாற்காலி இன்னும் அப்படியே உள்ளது. இங்கு சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. மாறாக ஆதரவே வழங்கப்படுகிறது.
கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முடக்கத்தைச் செய்துள்ளது. ஆனால் வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்தை குறைந்தபட்சமேனும் பரிசோதித்து மட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் இல்லை.
என்றாலும் நேர்மறையான முடிவுகள் ஓரளவு உணரப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களின் அர்ப்பணிப்பு காரணமாகும் என்று நாங்கள் நினைக்கிறோம். முடக்கம் விரைவில் நீக்கப்படும். இது பொதுமக்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் செய்யப்படுவதாலேயே பிரதிபலனை எதிர்பார்க்க முடியும். இந்த முறையில்தான் நாம் இதில் வெற்றியை அடைய முடியும்.
எனவே இந்த நாட்டின் அரசாங்கம் முன்கூட்டியே இது சார்ந்து திட்டமிட வேண்டும். இந்த அரசாங்கம் முன்கூட்டிய முடிவுகளை எடுக்காத போக்கு உள்ளது – என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment