யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயற்றினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையைப் பெறச் செல்லுவதை குறைக்கலாம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயம் செய்தபோதே சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் மாதாந்தம் 3500 இற்கும் மேற்பட்ட தொற்றா நோயாளர்கள் மற்றும் ஏனைய நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இருந்தும் ஒரு வைத்தியரும், மற்றொரு பல் வைத்தியரும் அவருடன் இணைந்த 4 ஊழியர்களுடனேயே வைத்தியசாலை இயங்கிவருகின்றது.
வெளிநோயாளர் பிரிவு இயங்கி வந்தாலும் கூட ஆளணிப் பற்றாக்குறை காரணமாக விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.
ஐந்து ஏக்கர் காணி பரப்பிலே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது. வைத்தியசாலைப் பாவனைக்காக பொதுமக்களால் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான அடிப்படை வசதிகள் இருந்தும் கூட ஆளணிப் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை முழுமையான சேவையைப் பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.
தரம் இரண்டிலிருந்து இந்த வைத்தியசாலை தரம் ஒன்றிற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வைத்திய சேவைகளை பெறுவதற்காக அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில், அருகிலேயே இந்த வைத்தியசாலையை தரம் மாற்றினால் ஆளணியும் உயர்வதுடன் இந்த பகுதி மக்கள் இங்கேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
உரிய தரப்புகளுடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார். அத்துடன் மாதகல் சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பாடசாலைக்கும் அவர் இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் விஜயத்தின் போது கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.
#SrilankaNews